பெண்….
கேரள மாநிலத்தில் பார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது – இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்பை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் என்று திருவள்ளுவர் அன்றே சொல்லி வைத்துள்ளார்.
அதன்படி இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் மீது வைத்திருக்கும் அன்பினாலேயே இந்த பூமி உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகையல்ல.
பல இக்கட்டான சூழ்நிலையில் நம்மில் பலருக்கு யாதொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்தவர்கள் பட்டியல் என்று இருக்கத்தான் செய்யும்.
அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் பார்வையற்ற நபர் ஒருவர் வாகனங்கள் பாயும் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். கணவரின் வருகைக்காக காத்திருக்கும் பெண் ஒருவர் அந்த பார்வையற்ற நபரின் உதவிக்கு ஓடிச் செல்கிறார்.
இதனிடையே, இவர்களை கவனித்த பேருந்து ஒன்று சற்று தள்ளிச் சென்று நிற்கிறது. உடனே பெருந்தின் அருகே ஓடிச் சென்ற அந்த பெண், பார்வையற்ற நபருக்காக கொஞ்சம் காத்திருங்கள் என கூறி, திரும்பவும் அந்த பார்வையற்றவரின் அருகாமைக்கு ஓடி வருகிறார்.
தொடர்ந்து அந்த பார்வையற்றவரை கையைப்பிடித்து அழைத்து வந்து பேருந்தில் ஏற்றிவிட்டு செல்கிறார். இச்சம்பவம் அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.