டைனிங் டேபிள்… ஃப்ரிட்ஜ்… ஸ்டோர் ரூம்… – சரியாகப் பராமரிப்பது எப்படி..?

923

பெயர்தான் டைனிங் டேபிள். ஆனால், சாப்பிடுவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளும் அங்கே நடக்கும்… காய்கறி வெட்டுவதில் தொடங்கி புரஜெக்ட்ஸ் செய்வது வரை. சாப்பிட வேண்டும் என நினைக்கிறபோது டைனிங் டேபிள் அதற்கு ஏற்ற நிலையில் இருக்காது. தரையில் உட்கார்ந்தும் சோபாவில் சாய்ந்துகொண்டும் சாப்பிடுகிறவர்கள்தான் அதிகம்.

டைனிங் டேபிளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது ஒரு கலை. தேவையற்ற பொருள்களை டைனிங் டேபிளில் போட்டுவைப்பதைத் தவிர்ப்பது அவசியம். கல்யாணப் பத்திரிகை வந்தால் அது டைனிங் டேபிளில்தான் கிடக்கும். இது மாதிரி அழைப்பிதழ்களைத் தேதியை மறக்காமலிருக்க ஃப்ரிட்ஜின் மேல் ஃப்ரிட்ஜ் மேக்னட் போட்டு ஒட்டிவிட்டால் கவனத்திலும் இருக்கும்; டேபிளும் சுத்தமாக இருக்கும். குழந்தைகளின் ஸ்கூல் சேர்குலர், முக்கியமான பில் போன்றவற்றைக்கூட இதேபோல ஒட்டிவைக்கலாம்.

சாப்பிடுவதையும் தாண்டி, வேறு வேலைகளுக்கும் டைனிங் டேபிளைப் பயன்படுத்துகிறீர்களா? பரவாயில்லை. வேலைகளை முடித்ததும் புத்தகங்களையும் லேப்டாப்பையும் அவற்றுக்கான சரியான இடங்களில் வைக்கப் பழகினால் டைனிங் டேபிள் சுத்தமாக இருக்கும். அதன்மேல் அலங்காரப் பொருள்களை வைப்பதைத் தவிர்க்கலாம். சாப்பிட மட்டும் பயன்படுத்தும்போது உப்பு, மிளகுத்தூள், ஸ்பூன்கள் எனத் தேவையானவற்றை வைத்திருக்கலாம். டைனிங் டேபிளில் அவசியம் இருக்க வேண்டியது மெழுகுவத்தி ஸ்டாண்டு. சாப்பிடும்போது திடீரென கரன்ட் போனால் கைகளுக்கு எட்டும்படி இருக்கும்.

டைனிங் டேபிள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் டேபிள் வைத்துள்ள அறையில் சின்னதாக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் அல்லது கட்லெரி கபோர்டு இருப்பது சிறந்தது. எல்லா வீடுகளிலும் தினமும் சாப்பிடுகிற மருந்துகள் பெரும்பாலும் டைனிங் டேபிளில்தான் இருக்கும். அவற்றை இந்த கபோர்டில் தனித்தனி பிரிவுகளில் வைத்தால், எடுத்து உபயோகிக்கச் சுலபமாக இருக்கும். டேபிள் அடைசலின்றி இருக்கும்.

விருந்தாளிகள் வந்தால் மட்டும் உபயோகிக்கிற ஸ்பெஷல் தட்டுகள், பாத்திரங்கள், கப்புகள் போன்றவற்றைத் தனி அலமாரிகளில் வைக்கலாம். இதை `கிராக்கரி கபோர்டு’ என்கிறோம். கண்ணாடிக் கதவு பொருத்திய அலமாரியாக இருந்தால் தூசு படியாது. இந்த கபோர்டிலேயே ஸ்நாக்ஸ் அயிட்டங்களையும் வைத்தால், சட்டென எடுக்க வசதியாக இருக்கும். கிச்சனில் அதிக சாமான்கள் அடைபடுவதையும் தவிர்க்கலாம். கிராக்கரி கபோர்டு பொருத்த வசதியில்லாதவர்கள், சின்னதாக ஒரு டேபிள் வைத்து அதன் மேல் ஸ்நாக்ஸ், கெட்டில், சமைத்த உணவுகள் போன்றவற்றை வைக்கலாம்.

பொதுவாகவே நம் சமையலறையில் ஃப்ரிட்ஜை வைப்பதற்குப் பதிலாக டைனிங் ரூமில் வைத்தால் அதன் ஆயுள் நன்றாக இருக்கும். பெரும்பாலானவர்களின் வீட்டு ஃப்ரிட்ஜில் பல வருடங்களுக்கு முன் வாங்கிய கெட்சப், காலாவதியான சாஸ், சாலட் டிரஸ்ஸிங், காய்ந்துபோன ஊறுகாய் பாட்டில் எனத் தேவையற்ற பொருள்கள் எக்கச்சக்கமாக இருக்கும். ஃப்ரிட்ஜை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, உள்ளிருக்கும் மொத்தப் பொருள்களையும் வெளியே எடுங்கள். அவற்றில் காலாவதியானவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள். தேவையானவற்றைத் தனியே எடுத்து ஃப்ரிட்ஜில் அடுக்கலாம். இன்ஸ்டன்ட் உணவுகளை வாங்கும்போது பலமுறை யோசியுங்கள். அவை ஆரோக்கியக்கேட்டை ஏற்படுத்துபவை.

சமைத்த உணவுகளை நீண்ட நாள்களுக்கு ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிருங்கள். அதிகபட்சம் ஒருநாள் வைக்கலாம். பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை ஸ்டோர் செய்வதற்குத்தான் ஃப்ரிட்ஜ். தவிர்க்க முடியாதபட்சத்தில் சமைத்த உணவுகளை இரண்டு நாள்கள் வைத்திருக்க வேண்டும் என்றால், அவற்றை ஃப்ரீஸரில் வைப்பதுதான் சிறந்தது. மிஞ்சிய உணவுகளை ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், பலருக்கும் உள்ளே வைத்தது கூட மறந்துவிடும். வாரம் ஒருமுறை ஃப்ரிட்ஜை அணைத்துவிட்டு உள்ளிருக்கும் டப்பாக்களையும் திறந்து அப்புறப்படுத்திச் சுத்தப்படுத்துவது உங்கள் உடல்நலனுக்கு மட்டுமன்றி ஃப்ரிட்ஜின் ஆயுளுக்கும் நல்லது.

என்னதான் ஃப்ராஸ்ட் ஃப்ரீ ரெஃப்ரிஜி ரேட்டர் என்றாலும் அடியில் கொஞ்சமாவது தண்ணீர் சேர்கிறது. அந்த அரை டம்ளர் தண்ணீரிலும்கூட டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் உருவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, ஃப்ரிட்ஜை சர்வீஸ் செய்யக் கூப்பிடும்போது அந்த ட்ரேயை எப்படிச் சுத்தப்படுத்துவது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தண்ணீரை அப்புறப்படுத்தினால் டெங்கு பயத்திலிருந்து தப்பிக்கலாம்.

இன்று நகர்ப்புற வீடுகளில் ஸ்டோர் ரூம் என்கிற கான்செப்ட்டே கிடையாது. அரிதாக யார் வீட்டிலாவது இருக்குமானால் அதற்குள் திணறத் திணற சாமான்கள் அடைக்கப்பட்டு முழி பிதுங்கிய நிலையில் இருக்கும். ஸ்டோர் ரூமைச் சுத்தம் செய்வதும் சமையலறையைச் சுத்தம் செய்வது போலத்தான். மொத்தப் பொருள்களையும் வெளியே எடுத்துவிட்டு, தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை அப்புறப்படுத்தி விடலாம். புதிதாக அடுக்கும்போது அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களைக் கீழ்த்தட்டிலும் எப்போ தாவது பயன்படுத்தும் பொருள்களை பரணிலும் வைத்துக்கொள்ளலாம்.பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை ஓலைக்கூடைகள் அல்லது தட்டுகளில் போட்டு வைத்தால் காற்றோட்டத்துடன் இருக்கும். நீண்ட நாள்களுக்கு அழுகாமலிருக்கும்.

சமையலறையிலும் ஸ்டோர் ரூமிலும் எலிகள் இருப்பது ஆபத்தானது. அந்த அறைகளின் ஜன்னல்களில் இரும்பு வலை பொருத்தலாம். ஆரோக்கியத்தின் அஸ்திவாரங்களில் எப்போதும் கவனமிருக்கட்டும்.