தமிழகத்தையே உலுக்கிய ஆராயி வழக்கின் குற்றவாளி சிக்கியது எப்படி?

644

தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம் ஆராயி வழக்கின் குற்றவாளி பொலிசாரிடம் சிக்கியது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஆராயி என்பவர், தனது 10 வயது மகன் சமயன், 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருந்தார்.

கடந்த பிப்ரவரி 21-ஆம் திகதி இரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிறுவனை கழுத்தில் மிதித்து கொலை செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த ஆராயி மற்றும் தனம் இருவரும் மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.

இந்நிலையில் தற்போது தில்லைநாதன் என்பவரை கைது செய்துள்ள பொலிசார் கூறுகையில், 7 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிய போது புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன்(36) என்ற சிறையில் இருந்து விடுபட்டுச் சென்றவன் தலைமறைவாக இருப்பதை கண்டுபிடித்தோம்.

அவன் கடலூர் சிறையில் இருந்தபோது திருக்கோவிலூரைச் சேர்ந்த ராமு என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரைப் பார்ப்பதற்காக அவன் அடிக்கடி திருக்கோவிலூருக்குச் சென்றுள்ளான்.

இருட்டிய பின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குள் நுழைந்து கைவரிசை காட்டும் பழக்கத்தை கொண்டிருந்த தில்லைநாதன், அன்று இரவு ஆராயி வீட்டில் ஆண் இல்லை தாழ்ப்பாளும் இல்லை என்பதை அறிந்து வீட்டிற்குள் புகுந்துள்ளான்.

முதலில் ஆராயியின் சங்கிலியை பறிக்க முயன்ற போது சிறுவர்கள் கண் விழித்த நிலையில், சமயனை தாக்கிவிட்டு இருவரையும் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான்.

ஆனால் இருவரும் சத்தம் போட்டதால் நகை, 9000 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.” என கூறுகின்றனர்.

மேலும், இந்த வழக்கின் தொடர்பில் திட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது என்றும் 90-க்கும் மேற்பட்ட பொலிசார் தூக்கமின்றி உழைத்ததாகவும் எஸ்.பி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.