தாயின் உயிரை பறித்த கொரோனா… அனாதையான 3 சிறுவர்களின் நிலை!!

364

திருநெல்வேலி………

திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அடுத்த துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாணிக்கராஜ் – ஞானம் மரிய செல்வி தம்பதியினருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஸ்டீபன் ராஜ், தர்மராஜ், செல்வின் ஆகிய 3 மகன்கள் உள்ள நிலையில் லாரி ஓட்டுனராக வேலைபார்த்து வந்த ஜெபம் மாணிக்கராஜ் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதனால் மூன்று மகன்களுடன் மனைவி ஞான மரிய செல்வி பரிதவித்த நிலையில் கணவனை இழந்த கைம்பெண் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி பணியாளராக வேலை கிடைத்தது.

அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தனது மூன்று மகன்களை படிக்க வைத்து பிழைப்பை நடத்தி வந்தார் ஞான மரிய செல்வி இந்த நிலையில் இந்த குடும்பத்திற்கு கொரோனா அரக்கன் வடிவில் விழுந்துள்ளது அடுத்த பேரிடி. அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஞான மரிய செல்வி சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிர் இழந்து விட மூன்று சிறுவர்களும் நிர்க்கதியான நிலையில் தவித்து வருகின்றனர்

தாய் தந்தையை இழந்து தவிக்கும் விவரம் தெரியாத வயதுடைய இந்த சிறுவர்களுக்கு தற்போதைய ஒரே ஆதரவு அவர்களது பாட்டி மாட்டுமே. தாய் இறந்ததை கூட உணராமல் இந்த சிறுவர்கள் குழந்தை குணம் மாறாமல் இயல்பாக இருந்து வருவது வேதனையின் உச்சமாக உள்ளது.

கொரோனாவின் கோரக் கரங்களுக்கு தாயை பறிகொடுத்துவிட்டு ஆதரவின்றி தவிக்கும் தங்கள் எதிர்கால வாழ்விற்கு தமிழக அரசும் அன்புள்ளம் கொண்டோரும் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் இந்த சிறுவர்கள்..!

தந்தை , தாயை இழந்ததால், தாயுள்ளம் கொண்டோரின் கருணை பார்வைக்காக ஏங்கும் இந்த சிறுவர்களுக்கு, தேவையான உதவியை செய்து காக்க வேண்டியது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமை..!