கடலூர்…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தியதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாச்சாரப்பாளையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அருள்முருகன் என்பவரின் மகளும் சில மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் கடந்த 27ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டு சென்னை சென்றுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்த தம்பதியினரை மரக்காணம் அருகே அருள்முருகன் காரை மடக்கி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தி சென்ற தம்பதியினரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.