தீண்டத்தகாதவராகப் பிறந்து ஆடம்பர நிறுவனத்தின் பெரும் பொறுப்பை எட்டிப்பிடித்த தலித் பெண்ணின் கதை!!

231

மேகா மலாகட்டி..

இந்தியாவின் கர்நாடகாவில், தலித் குடும்பத்தில் பிறந்து பிரான்சில் ஆடம்பர நிறுவனம் ஒன்றில் பெரும் பொறுப்பை எட்டிப்பிடித்த ஒரு பெண்ணின் கதை இது.

கன்னட மொழி துவங்கி பிரெஞ்சு மொழி வரை சரளமாக பேசும் இந்த பெண்ணின் கதை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாக உள்ளது.

தீண்டத்தகாதவராகப் பிறந்து, இந்தியாவில் ஒரு கிராமத்தில் பயின்ற மேகா மலாகட்டி, 2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

வாழ்க்கை, திருமணத்தையும் கொடுத்து விவாகரத்தையும் சந்திக்கவைத்தது. தூக்கமில்லா பல இரவுகளுக்குப் பின் அடுத்து என்ன என யோசித்தார் மேகா. பாரீஸிலுள்ள எசெக்ஸ் பிஸினஸ் பள்ளியில் இடம் கிடைத்தது அவருக்கு. ஆனால், கல்விக்கட்டணமோ 65 லட்சம் ரூபாய்.

நுழைவுக்கட்டணத்தை அப்பா செலுத்திய பிறகு, அவரிடம் வேறொன்றும் கேட்கத்தோன்றவில்லை மேகாவுக்கு. ஆகவே, செகண்ட் ஹாண்ட் ஷூக்கள், பாஸ்தாவில் வெண்ணையும் உப்பும் போட்டு சாப்பிடுவதுதான் எப்போதுமே சாப்பாடு.

பகுதி நேர உழைப்பு, கடின உழைப்பு… ஆனால் வெற்றிகரமாக எம்பிஏ படித்து முடித்த பிறகு, அவர் 148 ஆண்டுகள் பழமையான பிரெஞ்சு ஆடம்பர நிறுவனமான டுபோண்டில் சேர்ந்தார். அங்கு அவர் சந்தைப்படுத்தல் இயக்குநராக இருந்தார்.

தயாரிப்புகளின் வளர்ச்சி, வரையறுக்கப்பட்ட பதிப்புகள் உள்ளிட்ட அனைத்து சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளையும் நிர்வகித்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அங்கு பல்வேறு பொறுப்புகள்… மேகா, சமீபத்தில் பாரிஸில் உள்ள எல்’ஓரியல் குழுமத்தில் வணிக மேம்பாட்டு இயக்குநராக பணியில் இணைந்துள்ளார்.

சாதாரண நிலையிலிருந்து இவ்வளவு உயரத்தை எட்டிப்பிடித்த பிறகு, தன்னைப்போலவே வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்காக ’From Untouchable To Unstoppable’ என்ற தொண்டு நிறுவனத்தைத் துவங்கி, அவர்களுக்கு இலவச கல்வி கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மேகா.