நடுக்கடலில் கைது செய்யப்பட்ட துபாய் இளவரசி!!

906

துபாய் இளவரசியை சர்வதேச ஒப்பந்தங்களை மீறி நடுக்கடலில் கைது செய்து அவரது விருப்பத்திற்கு மாறாக அவரது நாட்டிற்கு அனுப்பி வைத்ததாக இந்தியா மீது அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அநீதிக்குள்ளாக்கப்படும் மக்களுக்கு உதவுவதாகக் கூறும் Detained in Dubai என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று, துபாய் இளவரசி Sheikha Latifa Al Maktoum பயணம் செய்த கப்பலை சட்ட விரோதமாகவும் முரட்டுத்தனமாகவும் வழிமறிக்க அமீரகத்திற்கு இந்தியா உதவியதாக குற்றம் சாட்டியுள்ளது.

துபாயின் மன்னராகவும் அமீரகத்தின் பிரதம மந்திரியாகவும் இருக்கும் Sheik Mohammed bin Rashid Al Maktoumஇன் மகளான Sheikha பின்னர் தனது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அவர் எங்கிருக்கிறார் என்ன ஆனார் என்பது தெரியவில்லை என்று Detained in Dubai கூறியுள்ளது.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியிலிருப்பவர் Herve Jaubert என்னும் பிரெஞ்சு அமெரிக்க குடிமகன்.

இவர்தான் இளவரசி பயணம் செய்த கப்பலை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaubert ஒரு முன்னாள் பிரெஞ்சு உளவாளி என்பதாகவும், துபாய் இளவரசி தனது தந்தையால் துன்புறுத்தப்படுவதாகவும் சித்திரவதை செய்யப்படுவதாகவும் கூறியதையடுத்து அவரை அவரது நாட்டிலிருந்து தப்பிக்க Jaubert உதவியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இளவரசி பயணம் செய்த கப்பலை நடுக்கடலில் வழி மறித்ததன்மூலம் இந்தியாவும் அமீரகமும் பல சட்டங்களையும் ஒப்பந்தங்களையும் மீறியுள்ளதாக Detained in Dubai குற்றம் சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையோ அல்லது பாதுகாப்பு அமைச்சகமோ இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.