நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 20 பேர் உடல் கருகி பலி

569

தாய்லாந்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் நேற்று நள்ளிரவு இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று, சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மியான்மர் எல்லைப் பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தின் மத்தியில் தீ பற்றியுள்ளது. இதனை அறிந்த ஓட்டுநர் பயணிகளை எச்சரிக்கை செய்தார். ஆனால், பேருந்தின் மற்ற இடங்களுக்கும் தீ வேகமாக பரவத் தொடங்கியது.

இரண்டு அடுக்கு பேருந்து என்பதால், மேல் பகுதியில் இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. கீழ் பகுதியில் இருந்தவர்கள் தீ பற்றிய உடனேயே வெளியேறி தப்பி விட்டனர்.

ஆனால் மேல் பகுதியில் இருந்தவர்களும், பேருந்தின் கடையில் இருந்தவர்களும் வெளியில் செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டதால், 20 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார் விரைந்து செயல்பட்டு, இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். அதன் பிறகு பாங்காக்கில் உள்ள தொழிற்பேட்டைக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது.

பேருந்தில் பயணம் செய்தவர்கள் மியான்மர் நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

கடந்த இரண்டு வாரங்களில், தாய்லாந்தில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய சாலை விபத்து இதுவாகும். இதற்கு முன்பு, மலைப்பகுதியில் சென்ற பேருந்து ஒன்று நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

உலகளவில் அதிக சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ள நாடுகளில், தாய்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.