நாகப்பாம்பை வைத்து தந்தைக்கு பூஜை செய்த மகன் : வீடியோ வைரலாகியதால் சிக்கிய பரிதாபம்!!

597

தமிழகத்தில் தனது தந்தையின் சதாபிஷேகத்தில் பாம்பை வைத்து பூஜை நடத்திய மகனை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரேசன்(45). இவர் அங்கிருக்கும் கோவில் ஒன்றில் புரோகிதராக உள்ளார். இந்நிலையில் சுந்தரேசன் தனது தந்தைக்கு 80 வயது முடிந்ததால் அவருக்கு சிறப்பாக சதாபிஷேக விழா நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த விழாவில் நாகப் பாம்பை வைத்து பூஜை நடத்தினால் ஆயுள் கூடும் என கருதிய அவர், பாம்பை வைத்து பூஜை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்காக பாம்பாட்டி பழனி என்பவரின் உதவியை நாடியுள்ளார். அவரது உதவியுடன் 2 நாகப்பாம்புகள் பூஜைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

உற்றார், உறவினர் என சதாபிஷேக விழாவில் தம்பதியினரிடம் ஆசி பெற வந்த நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பழனி கொண்டு வந்த 2 நாக ஜோடிகள் வெளியே விடப்பட்டது.

அதன் பின் தனது பெற்றோர் முன்பு நாகப் பாம்பை வைத்து பூஜை விமர்சையாக நடத்தியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் செல்பி எடுத்துக் கொண்டும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்துள்ளனர்.

இதையடுத்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டதால், அது வைரலாக பரவியது.

இதை அறிந்த கடலூர் மாவட்ட வனத்துறையினர் அனுமதியில்லாமல் வனவிலங்கைத் துன்புறுத்தும் வகையில் பயன்படுத்தியதை தொடர்ந்து வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுந்தரேசனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பாம்புகளை கொண்டு வந்த பழனியை பொலிசார் தேடிவருகின்றனர்.