பிரபல நடிகர் பிரகாஷ்ராஜை கொலை செய்ய திட்டம்: கொலையாளியின் பகீர் வாக்குமூலம்

558

நடிகர் பிரகாஷ்ராஜை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக, பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கர்நாடகாவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவா எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி, பெங்களுருவில் உள்ள அவரது வீட்டின் முன் வைத்து மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்தியா முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவலர்கள், சுஜீத்குமார் என்கிற பிரவீன், அமோல் காலே, பிரதீப், மனோகர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும், இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகி கே.டி நவீன்குமார் மற்றும் முக்கிய குற்றவாளி பரசுராம் வாக்மோர் ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில், கொலையாளி பரசுராமிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்துத்துவா மற்றும் மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்ததால் நடிகர் பிரகாஷ்ராஜை கொலை செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் நீங்கள் எங்களை பிடித்துவிட்டீர்கள் என பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

இதனையடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “எதிர்க்கும் குரல்களை ஒடுக்க திட்டமிடுகிறார்கள். என்னுடைய குரல் இனிமேல் தான் வலுப்பெறும்” என பதிவிட்டுள்ளார்.