பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்… மருத்துவ உலகை வியக்கவைத்த நிகழ்வு!!

1201

ஜார்கண்ட்….

பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் இருப்பது குறித்து தெரிய வந்த விஷயம், தற்போது மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.அவ்வப்போது நாம் அதிகம் கேள்விப்படாத விஷயங்கள் குறித்து புதிதாக தெரிய வரும் செய்திகள் நிச்சயம் நம்மை ஒருவித பிரம்மிப்பில் தான் ஆழ்த்தும். அப்படி ஒரு செய்தி தான், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறி பலரையும் ஏதாவது ஒரு வகையில் மிரளவும் வைத்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி, பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே பிறந்த அந்த குழந்தையின் மார்பு எலும்புக்கு கீழே வயற்றில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர். இதனை கவனித்ததும் பரபரப்பான மருத்துவர்கள், உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்றும் முடிவு செய்து அதனை குழந்தையின் பெற்றோர்களிடமும் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் குழந்தை பிறந்து 21 நாட்கள் ஆன சமயத்தில், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. குழந்தையின் வயற்றில் இருந்து கட்டியையும் மருத்துவர்கள் அகற்றிய நிலையில், அது பார்ப்பதற்கு நீர்க்கட்டி போல இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், அதனை பரிசோதித்து பார்த்த போது மருத்துவர்கள் கடும் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர். குழந்தையின் வயற்றில் இருந்த கட்டிக்குள் 8 கருக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவை ஒவ்வொன்றும் 3 முதல் 5 செ. மீ வரை இருந்ததும் அறிய வந்தது. மிகவும் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை இருந்து விட்டு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு உருவாகி இருப்பதே நம்ப முடியாத ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், அதற்குள் எட்டு கருக்கள் இருந்தது மருத்துவ உலகில் மிகப்பெரிய அரிதான நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

பிறக்கும் ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தான் இது போன்ற அரிய நிகழ்வு நடக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. மேலும் இப்படி தோன்றுவதன் பெயர் கருவுக்குள் கரு உருவாதல் (fetus in fetu) ஆகும்.

அதே வேளையில் ஒரு குழந்தையின் உடலுக்குள் ஒரு கரு தான் இதுவரை இருந்தது என்பது அதிகம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது 8 கருக்கள் ஒரே குழந்தையின் வயிற்றில் இருந்தது இது தான் முதல் முறை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவ உலகில் அரிதான நிகழ்வாக இது பார்க்கப்படும் நிலையில், பல மருத்துவ நிபுணர்களும் இதுகுறித்து வியப்புடன் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.