பிறந்த சில நிமிடங்களில் நீல நிறமாக மாறிய குழந்தை : கொரோனா தடுப்பு பணியால் குழப்பம்!!

702

நீல நிறமாக மாறிய குழந்தை..

இந்தியாவில் பிறந்த சில நிமிடங்களில் நீல நிறமாக மாறிய நிலையில் எதிர்பாராத திருப்பமாக குழந்தையை காப்பாற்ற பைக்கை ஆம்புலன்ஸாக மாற்றிய மருத்துவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மும்பையின் அலிபாக் பகுதியில் உள்ள வாஜே நர்ஸிங் ஹோமில் சில தினங்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 2.9 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த சில நிமிடங்களில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் சையனோசிஸ் என்ற உடல் நீல நிறமாக மாறும் பிரச்சனையும் குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வாஜே மருத்துவமனையில் அதற்கான வசதி இல்லை.

இதனை அடுத்து மருத்துவர் சந்திரகாந்த் வாஜே, 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு போன் செய்து அனைத்து தகவல்களையும் கூறி உதவி கேட்டுள்ளார்.

போன் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஆனந்தி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர், வாஜே மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரும் குழந்தையை பரிசோதித்துப் பார்த்துவிட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஆம்புலன்ஸ் சென்றுள்ளதால், அருகில் எந்தவித ஆம்புலன்ஸ் வசதியும் கிடைக்கவில்லை.

இதனால் என்ன செய்வது என தெரியாமல் அனைவரும் குழம்பினார்கள். அப்போது பொதுசுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றி வரும் குழந்தையின் அத்தையான இளம்பெண் சுப்ரியா பெட்கர், தன்னையையும் குழந்தையையும் பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு யோசனை வழங்கியுள்ளார்.

உடனே மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர் தன் பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றி குழந்தையை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டது.

தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் சந்தோர்கர் தெரிவித்துள்ளார். இக்கட்டான நேரத்தில் திடீரென சமயோஜிதமாக செயல்பட்ட மருத்துவர் மற்றும் நர்ஸ் எடுத்த இந்த முடிவை பலரும் பாராட்டி உள்ளனர்.