கன்னியாகுமரி…
கன்னியாகுமரி அருகே புதுமாப்பிளை குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தப்பியோடிய நபரை கன்னியாகுமரி போலிஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (37). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் நேற்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகே உள்ள ராஜா என்பவரது வீட்டில் மது அருந்தியுள்ளார்.
அப்போது ராஜா என்பவருடன் போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகராறு கைகலப்பாக மாறியதில் ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு கவாஸ்கரின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில் சரிந்து விழுந்த கவாஸ்கரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கவாஸ்கர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணமான மூன்றே மாதத்தில் வாலிபர் கொலையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.