கர்ப்பிணி மகளுக்கு..
தமிழகத்தில் ஆணவக்கொலைகளின் சரித்திரங்களை தேடி பார்த்தால் அரியலூர் மாவட்டத்தை தவிர்க்க முடியாது. இங்கு சாதி படுகொலைகள் மட்டுமல்ல தனிப்பட்ட காரணங்களாலும் பெற்றோரே மகளை அடித்தே கொன்ற சம்பவமும் பதிவாகியுள்ளது.
காதலித்த ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மகள் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும், தங்களுக்கு பிடிக்காத ஒரே காரணத்தினால் அந்த பெண் கொல்லப்பட்ட கதைதான் இது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கராசு-பவானி தம்பதி. இவர்களது மகள்தான் ஷர்மிளா (26). ஷர்மிளா தனது தூரத்து சொந்தமான கலைராஜன் என்பவரை சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இதற்கு ஷர்மிளாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஷர்மிளா 2008இல் வீட்டை விட்டு வெளியேறி கலைராஜனை திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.
சில நாட்கள் கழித்து ஷர்மிளாவை தேடி பிடித்த அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அரியலூருக்கு அழைத்து சென்றுவிட்டனர். பின்னர் ஷர்மிளாவை உறவுக்காரரான அன்புமணிக்கு கடந்த 2009 இல் திருமணம் முடித்துள்ளனர். அன்புமணியுடன் வாழ்ந்து வந்த ஷர்மிளா ஆண் குழந்தைக்கு தாயானார்.
குழந்தை பிறந்தாலும் காதலனை மறக்கமுடியாமலும், அன்புமணியுடன் வாழ பிடிக்காமலும் இருந்து வந்த ஷர்மிளா குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு காதலன் கலைராஜனுடன் வாழ சென்னைக்கு வந்துவிட்டார்.
சென்னையில் கலைராஜனுடன் நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஷர்மிளா கருவுற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஷர்மிளா முதல் மகனை பார்க்க அரியலூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. அதே சமயம், ஷர்மிளாவின் பெற்றோர்தான் திட்டமிட்டு அவரை அரியலூருக்கு அழைத்து வந்தார்கள் என மற்றொரு தரப்பு கூறுகிறது.
இந்நிலையில், அரியலூருக்கு வந்த ஷர்மிளாவிடம், கலைராஜனால் உருவான கருவை கலைக்குமாறும், கலைராஜன் ஒரு வகையில் உனக்கு அண்ணன் முறை என்பதால் இந்த திருமணத்தை ஏற்க முடியாது எனவும் ஷர்மிளாவிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
ஆனால், ஷர்மிளா அதற்கு இசைவு கொடுக்காமல் இருந்த நிலையில் ஆத்திரமடைந்த தந்தை தங்கராசு மற்றும் உறவினர்கள் நான்கு பேர் சேர்ந்து ஷர்மிளாவை தலை,வாய், முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
மேலும், தடயத்தை கலைத்துவிட்டு ஷர்மிளா தூக்கு போட்டுக்கொண்டார் என்றும் போலீசில் நாடகமாடியுள்ளனர். ஆனால், விசாரணையில் அனைத்து நாடகமும் அம்பலமான நிலையில் தங்கராசு உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.