சென்னை….
சென்னையில் இருந்து புறப்பட்டதாக கூறப்படும் பாய்ண்டு பாய்ண்டு அரசு பேருந்தில் திலகவதி என்ற பெண் பட்டதாரி பயணித்துள்ளார். இரவு நேரம் என்பதால் பேருந்துக்குள் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இளம்பெனின் பின் சீட்டில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த ஆண் பயணி ஒருவர் திலகவதியின் சீட்டுக்கும் ஜன்னலுக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியில் கையை விட்டு பெண்ணை தொட முயற்சித்துள்ளார்.
இதனை சுதாரித்துக்கொண்ட திலகவதி தனது செல்போனால் அந்த நபரின் கையை ஓங்கி அடித்துள்ளார். உடனே கையை எடுத்துக்கொண்ட அந்த நபர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பொறுமையை இழந்த திலகவதி ஊக்கை எடுத்து அந்த நபரின் கையை குத்த தொடங்கினார். மேலும், ஆதாரத்திற்காக அதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துக்கொண்டார்.
ஆனால், முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்டு ஊசி குத்து வாங்கின அந்த நபரோ, கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமல், திலகவதியை பார்த்து, நீதான் என் கையை பிடித்து இழுத்தாய் என கூறியது இளம்பெண்ணுக்கு உச்ச கடுப்பை உண்டாக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த திலகவதி, அந்த நபருக்கு பளாரென்று ஒன்று விட்டதுடன், பேருந்தில் இருந்து அவரை இறக்கி போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் வரும் வரைக்கும் சாமர்த்தியமாக செயல்பட்டு, தன்னிடம் அத்துமீற முயன்ற நபர் மீது 20 நிமிடத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வைத்த திலகவதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அதுமட்டுமில்லாமல், இந்த கசப்பான அனுபவத்தை தைரியமாக முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள திலகவதி, பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பெண்கள் தங்களை குற்றவாளிகளை போல எண்ணாமல் மன உறுதியுடன் சூழ்நிலையை எதிர்கொண்டு காவல்துறையிடம் புகார் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் , பெண்களிடம் அத்துமீறுபவர்களுக்கு இந்த வீடியோ ஓர் எச்சரிக்கை என்பதையும் பதிவு செய்துள்ளார்.