மகனின் கருவை சுமக்கும் தாய்… இப்படி ஒரு‌ முடிவுக்கு என்ன காரணம்? நெகிழ்ச்சி பின்னணி!!

731

அமெரிக்கா….

அமெரிக்காவின் உட்டாவா மாகாணத்தை சேர்ந்தவர் நான்சி ஹாக். இவருக்கு 56 வயதாகிறது. இவருடைய மகன் ஜெஃப் ஹாக் (32). இவருக்கு கேம்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதி ஆறு வருடங்கள் ஐவிஎஃப் சிகிச்சை பெற்றுவந்தனர். இதன்மூலம் இவர்களுக்கு வேரா மற்றும் அய்வா என்ற இரட்டையர்கள் பிறந்தனர்.

தற்போது இருவருக்கும் 3 வயதாகிறது. இதனையடுத்து டிஸீல் மற்றும் லூகா என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் கேம்பிரியா. ஆனால், பிரசவத்தின்போது அவருடைய உடல்நிலை மோசமாகியுள்ளது. வேறுவழியின்றி கேம்பிரியாவின் கருப்பையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஆகவே அவரால் மீண்டும் குழந்தையை பெற்றெடுக்க முடியாமல் போனது.

இருப்பினும், ஜெஃப் ஹாக் மேலும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால், கேம்பிரியாவால் மீண்டும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அவரது கணவர் ஜெஃப் ஹாக் மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இந்த அதிர்ச்சியில் இருந்த அவருக்கு அவருடைய தாய் ஆறுதல் கூறியிருக்கிறார். இருப்பினும், இந்த தம்பதியின் கருக்கள் சேமிப்பில் இருப்பதை அறிந்த நான்சி புதிய ஆலோசனையை வழங்கியிருக்கிறார்.

அதன்படி, கேம்பிரியாவின் கருவை மருத்துவ உதவி மூலமாக தனது கர்ப்பப்பையில் சுமக்க முடிவெடுத்திருக்கிறார் நான்சி. ஆனால், அவருடைய வயது காரணமாக இது சாத்தியமற்றது என்றே குடும்பத்தினர் நினைத்திருக்கின்றனர். இருப்பினும், மருத்துவ பரிசோதனை மூலம், நான்சி அதற்கு தகுதி பெற்றவர் என்பது உறுதியானவுடன், மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருக்கிறார் நான்சி. வரும் நவம்பர் மாதம் நான்சிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

இதுபற்றி பேசிய அவர்,”நான் எனது மகனை சுமந்தது போலவே தற்போது என் பேத்தியையும் சுமக்கிறேன். குழந்தையை மிகவும் எனது மகன் மற்றும் மருமகள் விரும்புகின்றனர். ஆகவே அவர்களுக்கு நான் உதவ நினைத்தேன். முன்னெப்போதையும் விட நான் வலிமையாக உணர்கிறேன்.

26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் குழந்தையை சுமப்பது பல உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. என் மகனிடம் அவனுடைய குழந்தையை ஒப்படைக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, 2022 ஜனவரி முதல் நான்சி சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். குழந்தையை சுமப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம் என்றும் அதுவே, தனது மகனுக்காக இதை செய்ய முடிந்தது வார்த்தைகளில் விவரிக்க முடியாத அனுபவம் என்கிறார் நான்சி.