தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியில் மது போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலாந்தரவை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு பிறகு அந்த ஊரை சேர்ந்தவர்கள் மது அருந்தியுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் கத்தி அருவாள் போன்ற ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டனர்.
இந்த தகராறில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டும், ஒருவர் படு காயங்களுடன் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் டிஐஜி காமினி தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.