மனமுடைந்த இளம்பெண் தற்கொலை : சிக்கிய உருக்கமான கடிதம்!!

344

நாமக்கல்….

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜி மற்றும் செல்லம்மாள் தம்பதியினர். கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு அஞ்சலை என்ற மகள் உள்ளார்.

12ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்த அஞ்சலை, அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இது குறித்து சூர்யா மற்றும் அஞ்சலை ஆகியோரின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அதனை தொடர்ந்து இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அஞ்சலையின் நடத்தை குறித்து அக்கம் பக்கத்தினர் இழிவாகவும், தவறுதலாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து மனமுடைந்த அஞ்சலை, கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அங்கிருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த கடிதத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், தான் நல்லவள் எனவும் கூறி உருக்கமாக எழுதியுள்ளார்.

மேலும் கடிதத்தில், தனது இறப்பிற்கும் காதலன் சூர்யாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், அவனை எதுவும் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அஞ்சலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அஞ்சலியின் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.