கணவன்….
சென்னையில் கொரோனா ஊரடங்கால் வருவாய் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு தன் மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு மாத வாடகையை வணிக கட்டட உரிமையாளர் தள்ளுபடி செய்த சம்பவத்துக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
மாதவரம், நேரு தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (58). இவருக்கு சொந்தமான கட்டடத்தில், 14 கடைகள் உள்ளன. அவற்றில், டீக்கடை, முடி திருத்தகம், செருப்பு கடை, ஜெராக்ஸ் கடை, போட்டோ ஸ்டுடியோ உள்ளிட்டவை உள்ளன.
ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதமாக, அந்த கடைகளை நடத்துவோர், வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கட்டட உரிமையாளர் ஏழுமலை, தன் மனைவி பரமேஸ்வரியின் 49வது பிறந்த நாளையொட்டி, கடைக்காரர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களுக்கான ஒரு மாத வாடகையை தள்ளுபடி செய்துள்ளார்.
இதுகுறித்து ஏழுமலை கூறுகையில், என் கடைகளுக்கு, ஒரு மாத மொத்த வாடகை தொகை, 99 ஆயிரத்து, 150 ரூபாய். இன்றைய நெருக்கடியான சூழலில் இது எனக்கு பெரிய தொகை தான்.
இன்று, என் மனைவிக்கு, 49வது பிறந்த நாள். இந்நாளில் நமக்கு தெரிந்தவர்களின் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வது கடமை என நினைத்தேன்.
அப்போது, கிடைக்கும் சந்தோஷம் பணத்தை விட கூடுதலாகிறது. இது கொரோனா கற்றுத் தந்த பாடம். மற்றவர்களும் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவினால் கொரோனாவை எளிதில் வென்று விடலாம் என கூறியுள்ளார்.