மரண படுக்கையில் தாய் : கடைசி ஆசைக்காக மூன்று மணி நேரத்தில் இளம்பெண்ணை தேடி திருமணம் செய்த 40 வயது நபர்!!

670

விழுப்புரம்…

விழுப்புரம் அருகே தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு  தாய் மாமன் மகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து முதிர்காளை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்க்கு கொடுத்த வாக்கை, அடுத்த நிமிடமே நிறைவேற்றிய தனயன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…

விழுப்புரம் திருக்காமு நகரைச் சேர்ந்தவர் தயாளன்.பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வரும் இவர், 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயை பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் இவரது தாய் முத்தாலம்மாள் கடந்த இரு நாள்களுக்கு முன், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையடுத்து, தனது மகன் தயாளனிடம் என்னால் உனக்கு திருமணம் செய்து பார்க்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு முத்தாளம்மாள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதைக் கேட்ட தயாளன், மருத்துவமனையில் தாயை பார்க்க வந்திருந்த தனது தாய் மாமன் கோனனூரை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகள் காயத்திரி என்பவரை, உறவினர்கள் மத்தியில் பேசி,

திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். 30 வயதாகியும் திருமணமாகாமல் இருந்த காயத்திரி சம்மதத்துடன் உடனடியாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றிக் கொண்டனர். மணமகள் காயத்திரி கழுத்தில் தயாளன் தாலி கட்டி, நெற்றியில் திலகமிட்டார்.

மணமக்களுக்கு உடனிருந்த நண்பர்கள் செந்தில், அய்யனார், மோகன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். இதைபார்த்து வியந்து போன மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் முடிந்ததும் தாயிடம் ஆசி வாங்க மருத்துவமனைக்கு மணமக்கள் சென்றனர். மருத்துவர்கள் வார்டினுள் அனுமதிக்காததால், தாயிடம் தகவலை தெரிவிக்குமாறு மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் கூறிவிட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

பெற்ற தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முரட்டு சிங்கிளாக இருந்த முதிர்காளையான தயாளன், மூன்று மணி நேரத்தில் முறை பெண்ணை மணந்து திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது குறிப்பிடதக்கது.