மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் என ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட ரீதியாக ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், நேற்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முந்தைய கூட்டங்களில் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் முதல் முறையாக நேற்று நேரில் கலந்துரையாடல் நடத்தினார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனையின்போது ரஜினி பேசியதாவது,
அரசியலில் எந்த விடயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம். அரசியலில் அடிப்படை கட்டமைப்பு தான் முக்கியம். 32 மாடி அஸ்திவாரம் போல 32 மாவட்டங்களில் கட்டமைப்பு முக்கியம். அனைத்து ரசிகர்களையும் சந்திக்க சில நாட்கள் ஆகும். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும். நாம் வேலையை அமைதியாக செய்வோம்.
என் ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத் தரவேண்டாம். நீங்கள் மற்றவர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுப்பவர்கள். விரைவில் உங்களை உங்கள் மாவட்டத்தில் சந்திக்கிறேன். பெருகி வரும் ரசிகர்களின் ஆதரவை பார்க்கும்போது அரசியலில் நம்மால் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை அதிகமாகி வருகிறது என்று அவர் பேசினார்.