சென்னை…
சென்னை வியாசர்பாடியில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் லதா. இவருக்கு சுதா என்ற மகளும், இரு மகன்களும் உள்ளனர்.
இதில் சுதாவுக்கும், மாதவரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
பெயிண்டராக இருந்து வரும் பாலாஜிக்கும், சுதாவிற்கும் இடையே கடந்த சில தினங்களாகவே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு சுதா பாலாஜியிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கே சென்றுவிட்டார்.
அவரை சமாதானப்படுத்த தனது நண்பரான திவ்யநாத்தை அழைத்துக் கொண்டு சுதாவின் தாயாருக்கு சென்றுள்ளார் பாலாஜி.
அங்கு மீண்டும் சுதாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பாலாஜி ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாவின் கையில் வெட்டியுள்ளார்.
அப்போது இதனை தடுக்க அந்த மாமியாரான லதாவை சரமாரியாக குத்தியுள்ளார் பாலாஜி. இதற்கு அவரது நண்பரான திவ்யநாத்தும் உடந்தையாக இருந்துள்ளார்.
பலத்த காயமடைந்த லதா மற்றும் சுதாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அக்கம் பக்கத்தினர்.
இதில் லதா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழக்க சுதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பாலாஜி மற்றும் அவரது நண்பர் திவ்யநாத் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.