மிகப்பெரிய ரயில் விபத்தை தடுத்த மூதாட்டி : நடந்தது என்ன?

158

உத்தர பிரதேசம்…

உத்தர பிரதேச மாநிலத்தில் கஸ்பா என்ற இடத்தில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே உள்ள அவாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்வதி. மூதாட்டியான இவர் ரயில்வே தண்டவாளம் செல்லும் பகுதி வழியாக தனது வயலுக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழியாக ரயில் வரும் என்பதை அறிந்த அவர் முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றமடைந்துள்ளார். பிறகு, தான் அணிந்திருந்த சிவப்பு சேலையை மரக் குச்சிகளில் கட்டி அதை தண்டவாளத்தின் குறுக்கே வைத்துள்ளார்.

பின்னர் அந்த வழியாக வந்த ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் சிவப்பு சேலை கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து ஏதோ அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து உடனே ரயிலை நிறுத்தியுள்ளார். பிறகு அங்கு வந்து பார்த்தபோது ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததைப் பார்த்துள்ளார்.

உடனே இது குறித்து அருகே இருக்கும் ரயில்வே நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தின் விரிசலை சரிசெய்தனர். பிறகு ஒரு மணி நேரம் கழித்து அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்தச் சம்பவத்தை சச்சின் கவுஷின் என்ற ரயில்வே காவலர் தனது சமூகவலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலானதை அடுத்து மூதாட்டி ஓம்வதிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மூதாட்டியின் இந்தச் செயலை பாராட்டிய ரயில் ஓட்டுநர் அவருக்கு ரூ.100 பரிசாகக் கொடுத்துள்ளார். ஆனால் அதை அவர் ஏற்க மறுத்து அங்கிருந்து சென்றது குறிப்பிடத்தக்கது.