மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி : பெற்றோர் கதறி அழுத பரிதாபம்!!

295

திருச்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா – வனிதா தம்பதி. இவர்களது இளைய மகள் வேதவர்ஷினி (6) ஏவூர் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் வேதவர்ஷினி தனது வீட்டிற்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது வீட்டிற்கு அருகாமையில் இருந்த மின்சார இணைப்பு ஒயரின் துணை கம்பமாக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு குழாயை பிடித்துள்ளார். அப்போது அந்த குழாயில் மின்சாரம் பாய்ந்துள்ள நிலையில் சிறுமி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் வேதவர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி் வைத்தனர். மேலும், இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டருகே விளையாடி கொண்டிருந்த ஆறு வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோக சம்பவம் குடும்பத்தாரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.