முகநூலை அதிகம் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் எவை தெரியுமா?

630

ஃபேஸ்புக்…

முகநூலை (ஃபேஸ்புக்) அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு விபரங்கள் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி’ ஆய்வு இதழில் வெளியாகியுள்ளன.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சராசரியாக 48 வயதுடையவர்களின் முகநூல் பயன்பாடு குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 52,000 பேர் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதலில் அவர்களது உடல் மற்றும் மனநலன் குறித்து பரிசோதிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அடுத்தகட்டமாக, பங்கேற்பாளர்களின் அனுமதியுடன் அவர்களது முகநூல் நடவடிக்கைகளும் அலசி ஆராயப்பட்டன.

அந்த ஆய்வில், பிறரது பதிவுகளுக்கு அதிக அளவில் “விருப்பம்’ (Like) தெரிவித்தவர்களும், தங்களது எண்ணங்களை (Status) அடிக்கடி பதிவு செய்பவர்களும் உடல் மற்றும் மன நலன் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர்.

அதேநேரம், மிகக் குறைந்த அளவு விருப்பங்களையும் (Like), எண்ணங்களையும் (Status) பதிவு செய்தவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தனர்.

உடல்/மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் முகநூலை அதிக அளவில் நாடுவதாகவும், அது அவர்களது உடல்நலனையும், மனநலனையும் மேலும் மோசமடையச் செய்வதாகவும் ஆய்வில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் முகநூலை அதிக அளவில் பயன்படுத்துவதாகக் கூறும் ஆய்வாளர்கள், எனினும், அவர்களது உடல் பருமனுக்கு முகநூல் பயன்பாடு காரணமல்ல என்றும் தெளிவுபடுத்தினர்.

ஏற்கனவே, முகநூல் பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பல சுவையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

முகநூலில் அதிக எண்ணிக்கையில் நண்பர்களின் அழைப்புகளை ஏற்பவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றுள்ளதாகவும், அதிக எண்ணிக்கையில் புதிய நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் குறைந்த ஆயுளைக் கொண்டுள்ளதாகவும் ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.