மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு செத்து மிதக்கும் மீன்கள்!!

593

மேட்டூர் அணையின் காவிரி ஆற்றில், கழிவு நீர் துர்நாற்றத்தால் செத்துமடியும் மீன்களுக்கு, அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது.

மேட்டூர் அணையின் காவிரியாற்றில் செல்லக்கூடிய தண்ணீரின் நிறம் பச்சை நிறத்தில் மாறி உள்ளதாலும், அதிக அளவில் துர்நாற்றம் வீசி வருவதாலும், சிறிய வகை மீன்கள் முதல் பெரிய வகை மீன்கள் வரை, கடந்த வாரம் செத்து கரை ஒதுங்கியது.

மேலும் ஏராளமான மீன்களுக்கு போதிய ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கரை ஓரத்தில் உயிருக்கு போராடியது. இந்த நிலையில் தற்பொழுது மேட்டூர் அணையின் காவிரியாற்றில் மீண்டும் மீன்கள் செத்து மிதக்கின்றன.

அதன்படி மாதையன் குட்டை முதல் செக்கானூர் கதவணை மின்நிலையம் வரையிலான சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சிறிய, வகை மீன்கள் முதல் 10 கிலோ வரையிலான மீன்கள் வரை செத்து கரை ஒதுங்கியுள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் இறந்தபோன மீன்களை பரிசல் மூலமாகவும் கரையில் துணி போட்டும் மீன்களை எடுத்துச் செல்கின்றனர்.

மேலும் மேட்டூர் அணையின் நீர் தேக்கத்தின் அடிப்பகுதியில் ஏற்கனவே படிந்துள்ள கழிவுநீரை காவிரியில் திறந்து விட்டதால், ரசாயன கழிவின் துர்நாற்றம் தாங்க முடியாமல் சுவாச கோளாறு காரணமாக கடந்த வாரம் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.

இவ்வாறு கடந்த சில வாரங்களாக மீன்கள் செத்து மிதப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து காவிரி ஆற்றை ஆய்வு செய்து தண்ணீர் மாதிரியையும் எடுத்துச் சென்றனர்.

ஆனால் அதற்கான எந்த ஆய்வறிக்கையும் இதுவரை வெளிவரவில்லை. எனவே காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.