லட்சங்களில் லோன் தருவதாக மோசடி.. 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

1204

சென்னையில்..

சேப்பாக்கம் அருணாச்சலம் தெரு பகுதியை சேர்ந்த லட்சுமி(31) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும் ரூ.5 லட்சம் எளிய முறையில் கடனாக பெற்றுத்தர முடியும் என கூறியுள்ளார். மேலும், அதற்கு இன்சூரன்ஸ் தொகையாக ரூ.31,000 கட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து லட்சுமி கூகுள் பே மூலமாக ரூ.31,000 செலுத்தியுள்ளார். பின்னர் தான் அவர்கள் தன்னை ஏமாற்றியது லட்சுமிக்கு தெரியவந்தது. இதனையடுத்து லட்சுமி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட திருவல்லிக்கேணி போலீசார் வங்கியில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்த சம்பவத்தில்,

கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த அரவிந்த்(22), பழவந்தாங்கல் கண்ணதாசன் காலனியைச் சேர்ந்த பால் ஜோசப்(27), அயனாவரம் அம்பேத்கர் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த தெரசா(22), எண்ணூர் பெரிய காசி கோயில் குப்பம் பகுதியை சேர்ந்த வினிதா(21) ஆகிய நான்கு நபர்களை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இவர்கள் தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது இதுபோன்று மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. கால் சென்டரில் பதிவாகும் எண்களில் ரேண்டமாக தேர்ந்தெடுத்து அந்த நபர்களுக்கு கால் செய்து தங்களுக்கு எளிமையாக லோன் பெற்று தர முடியும் எனக்கூறி அதற்கு இன்ஷூரன்ஸ் தொகை கட்ட வேண்டும் என்று மோசடி செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, இரண்டு இளம் பெண்கள் உட்பட நான்கு நபர்களும் எத்தனை நபர்களை வங்கியில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்கள் என்பது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.