லண்டனில் அதிர்ச்சி சம்பவம்: ரயில் விபத்தில் சிக்கியவர் மீது ஏறி இறங்கிய 300 ரயில்கள்!

514

லண்டனில் டியூப் சேவை ரயிலில் அடிபட்டு விபத்தில் சிக்கியவரின் உடலை மீட்கஅதிகாரிகள் 14 மணி நேரம் தாமதித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகளின் மெத்தனத்தால் குறித்த நபரின் உடல் மீது சுமார் 300 ரயில்கள் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று காலை சுமார் 11.30 மணியளவில் ரயில் ஒன்று தானாகவே நின்றுபோயுள்ளது. இதனையடுத்து அந்த பகுதி மேலாளர் ஒருவர் விசாரணைக்காக சென்றுள்ளார்.

அப்போது ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் நரி ஒன்றின் மிச்சம் மீதிகள் கிடப்பதாக அவர் கருதியுள்ளார்.இதனையடுத்து ரயில் சேவையை நள்ளிரவு 1.42 மணி வரை மேற்கொள்ளவும் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து பல மணி நேரத்திற்கு பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஷூ உடன் சிதைந்த கால் ஒன்றை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் சிதைந்து உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது நரிஅல்ல என்பதும் அது மனித உடலில் மிச்சம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை சோதனையிட்ட பொலிசார், Holborn பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் நபர் ஒருவர் நுழைவதை கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பிட்ட ரயில் தடத்தில் மணிக்கு 26 ரயில்கள் கடந்து செல்வதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான நபரின் உடல் சுமார் 14 மணி நேரம் மீட்கப்படாமலே கிடந்துள்ளது.

இதனால் சுமார் 300 ரயில்கள் அந்த நபரின் உடல் மீது ஏறி இறங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டு காலகட்டத்தில் லண்டன் சுரங்க ரயிலில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 15 என கூறப்படுகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கணக்கிடுகையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 92 என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு டிசம்பரில் தற்கொலை செய்து கொண்டவர் Maidstone பகுதியில் குடியிருக்கும் 47 வயது நபர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.