கோரிமா….
கிருஷ்ணகிரி மாவட்டம்ஒசூர் அருகேயுள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ் (28) பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோரிமா (27) இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது கோரிமா இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கோரிமா கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி, வயிற்றுவலி போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது கணவர் ரியாஸ் அவரை கடந்த சில நாட்களாக தொரப்பள்ளி கிராமத்தில் ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அந்த மருத்துவர் இல்லாததால், அருகே இருந்த அக்குபஞ்சர் மருத்துவர் முருகேசன் (59) என்பவரிடம் மருத்துவம் பார்த்ததாகவும், சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
பிறகு வீட்டிற்கு சென்ற கோரிமாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கணவர் ரியாஸ் கோரிமாவை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே மயக்கமுற்று கோரிமா உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட மருத்துவ ஆயவாளர் ராஜூவ் காந்தி, ஒசூர் முதன்மை மருத்துவர் பூபதி ஆகியோர் தொரப்பள்ளி கிராமத்தில் முருகேசன் வைத்திருந்த மருந்தகத்தை ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களின் பரிந்துரையின்றி பல மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
அந்த மருந்துகளை பறிமுதல் செய்து மெடிக்கலுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, மருத்துவர் பூபதி அளித்த பேட்டியில், அக்குபஞ்சர் சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது. சட்டப்படி அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்தாரா என்பது ஆய்வில் தெரிந்த பின்னரே அதற்கான நடவடிக்கை பாயும்.
தற்போது கர்ப்பிணி பெண் உடல் கிருஷ்ணகிரி மெடிக்கல் ஆய்விற்கு அனுப்பி வைப்பதாகவும் ஓசூர் தலைமை மருத்துவர் பூபதி ஓசூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.