வாட்ஸ்அப்பில் வந்த ஆபாச வீடியோ… ரூ. 55 ஆயிரத்தை இழந்த இளைஞர் : போலீஸ் தீவிர விசாரணை!!

277

ஐதாராபாத்….

ஐதாராபாத்தில் உள்ள நர்சிங்கி பகுதியில் வசித்து வரும் 30 வயதான இளைஞர் வாட்ஸ்அப் செயலியில் தனக்கு வந்த வீடியோ கால் அழைப்பை ஏற்று பேசியதற்கு ரூ. 55 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார்.

நூதன மோசடியில் சிக்கிய இளைஞருக்கு முதலில் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் வந்துள்ளது. வழக்கமான அழைப்புகளாகவே இருக்கும் என நினைத்து அழைப்பை ஏற்ற நபருக்கு, மறுபுறம் வீடியோ காலில் யாரும் எந்த வார்த்தையும் பேசாமல் அழைப்பை துண்டித்த சம்பவம் புதிதாக இருந்துள்ளது.

பின் அடுத்த சில நொடிகளில் மீண்டும் அதே எண்ணில் இருந்து இளைஞருக்கு வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் வந்துள்ளது. அதை திறந்து பார்த்ததும், இளைஞர் அதிர்ச்சியில் திக்கு முக்காடி விட்டார். இளைஞருக்கு அந்த எண்ணில் இருந்து வந்த குறுந்தகவலில் மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச பட வீடியோ அனுப்பப்பட்டு இருந்தது.

பின் இளைஞரிடம் பேசிய மர்ம நபர் தான் கேட்கும் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பணத்தை கொடுக்காத பட்சத்தில் வீடியோவை தனது நண்பர்கள் சிலருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி உள்ளார்.

வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர் முதலில் ரூ. 5 ஆயிரம், பின் ரூ. 30 ஆயிரம் கொடுத்து இருக்கிறார். அதன்பின் மீண்டும் சில நாட்கள் கழித்து மர்ம நபர் இளைஞரை மிரட்டியதை அடுத்து மூன்றாவது முறை ரூ. 20 ஆயிரம் கொடுத்தார். இதே போன்று மூன்று தவணைகளில் மொத்தம் ரூ. 55 ஆயிரத்தை மர்ம நபருக்கு அனுப்பி இருக்கிறார். இதை அடுத்தும் மர்ம நபர் தொடர்ந்து இளைஞரை தொடர்பு கொண்டு மிரட்டி வந்ததால், இளைஞர் ஒருவழியாக காவல் துறையில் புகார் அளித்து இருக்கிறார்.

கடந்த காலங்களில் பெண்கள் இளைஞர்களை தொடர்பு கொண்டு முதலில் பேசுவர். பின் அவர்களிடம் இருந்து ஆடையின்றி புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்புமாரு கூறுவர். இவை அனைத்தையும் இளைஞருக்கு தெரியாமல் பதிவு செய்து கொண்டு, பின் இளைஞர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இந்த முறை மறுபுறம் யாரும் பேசவில்லை என இளைஞர் கூறி இருக்கிறார். முதலில் தனது வீடியோ எப்படியோ படம்பிடிக்கப்பட்டு, அதன்பின் அது மார்ஃபிங் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்து இருக்கிறார். பெரும்பாலும் மர்ம நபர்கள் பயனர்களின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் இருந்து மொபைல் எண்ணை எடுத்து இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவர்.

சைபர் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காவல் துறை சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், பலர் இதுபோன்ற கும்பல்களிடம் சிக்கி தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பது கவலை அளிப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.