பென்யமின் அகமது…..
லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தன் பள்ளி விடுமுறையின் போது சுமார் 2,90,000 பவுண்டு ஸ்டெர்லிங் சம்பாதித்துள்ளார். பிக்ஸலேடட் படங்கள் என்கிற ஒருவகையான கலை வேலைப்பாடு மூலம் வித்தியாசமான திமிங்கலங்களையும், என்.எஃப்.டி என்றழைக்கப்படும் ‘நான் ஃபங்கிபில் டோக்கன்களையும்’ விற்று இவ்வளவு பணத்தை சம்பாதித்து இருக்கிறார் அந்த சிறுவன்.
என்.எஃப்.டி-க்கள் ஒரு வகை டிஜிட்டல் சொத்து. அது எத்தனை அரிதாக இருக்கிறதோ அவ்வளவு அதிக விலை கிடைக்கும்.
உதாரணமாக என்பிஏ டாப் ஷாட் எனப்படும் டிஜிட்டல் படங்களைக் கூறலாம் என்கிறது பிசினஸ் இன்சைடர் வலைதளம். என்.எஃப்.டி-க்களுடன், கலை படைப்புகளுக்கும் உரிமை கொண்டாட அதை டோக்கனைஸ் செய்து உரிமை சான்றிதழ்களைப் பெறலாம்.
அந்த சான்றிதழ்களை வாங்கவோ விற்கவோ முடியும். வாங்குபவருக்கு உண்மையான கலைப்படைப்பையோ அல்லது அதன் பதிப்புரிமையையோ பொதுவாக கொடுப்பதில்லை. பென்யமின் அகமது, தான் ஈட்டும் பணத்தை எதிரியம், கிரிப்டோ கரன்சி வடிவில் வைத்துள்ளார். அவருக்கு ஒருபோதும் பாரம்பரிய வங்கிகளில் வங்கிக் கணக்கு இருந்ததில்லை.
மிகுந்த பெருமை
பென்யமினின் வகுப்பு தோழர்கள் அவரது புதிய கிரிப்டோ செல்வத்தைக் குறித்து இன்னும் அறிந்திருக்கவில்லை, இருப்பினும் அவர் தனது பொழுதுபோக்கு குறித்து யூடியூபில் காணொளிகளை உருவாக்கியுள்ளார், அவர் நீச்சல், பேட்மின்டன், டேக்வாண்டோ ஆகியவற்றையும் விளையாடி வருகிறார்.
“இந்த இடத்திற்குள் நுழைய விரும்பும் மற்ற குழந்தைகளுக்கான எனது ஆலோசனை என்னவென்றால், கோடிங் செய்ய உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள், ஒருவேளை நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள சகாக்களின் அழுத்தம் காரணமாக அதை செய்ய வேண்டி இருக்கலாம் – நீங்கள் சமைக்க விரும்பினால், சமையல் செய்யுங்கள், நீங்கள் நடனமாட விரும்பினால், நடனமாடுங்கள், உங்கள் பலத்தைப் பொருத்து அதைச் செய்யுங்கள்,” என்று அவர் கூறினார்.
பென்யமினின் தந்தை இம்ரான், ஒரு மென்பொருள் மேம்பாட்டாளர். அவர் பாரம்பரிய நிதித் துறையில் பணியாற்றி வருகிறார். பென்யமின் மற்றும் அவரது சகோதரர் யூசுப் ஆகியோரை ஐந்து மற்றும் ஆறு வயதில் கோடிங் செய்ய ஊக்குவித்தார் அவர்.
குழந்தைகள் கோடிங் குறித்த ஆலோசனை மற்றும் உதவிக்கு அழைக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் வலுவான நெட்வொர்க் இருந்தது. இம்ரான் தன் குழந்தைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறார்.
சிறுவர்களுக்கு கோடிங் பயிற்சி
பவுண்ட் ஸ்டெர்லிங் “கோடிங் செய்வது கொஞ்சம் வேடிக்கையான பயிற்சியாக இருந்தது – ஆனால் அவர்கள் அதை ஏற்கும் நிலையில் இருந்தார்கள், அவர்கள் அதை சிறப்பாக செய்கிறார்கள் என்பதை நான் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டேன்,” என இம்ரான் கூறினார்.
“எனவே, நாங்கள் இன்னும் கொஞ்சம் தீவிரமாக பயிற்சியைத் தொடங்கினோம் – இப்போது தினமும் கோடிங் செய்கிறோம். ஆனால் இந்த விஷயங்களை நீங்கள் திணிக்க முடியாது, நான் மூன்று மாதங்களில் கோடிங் செய்ய கற்றுக்கொள்வேன் என்று நீங்கள் கூற முடியாது.” சிறுவர்கள் ஒரு நாளைக்கு 20 அல்லது 30 நிமிடங்கள் கோடிங் பயிற்சி செய்தனர். இதில் விடுமுறை நாட்களும் அடக்கம் என இம்ரான் கூறினார்.
வித்தியாசமான திமிங்கலங்கள் பென்யமினின் இரண்டாவது டிஜிட்டல்-கலை சேகரிப்பு ஆகும், அதற்கு முந்தைய மைன்க்ராஃப்ட்டால் ஈர்க்கப்பட்ட தொகுப்பு குறைவாகவே விற்பனையானது. இந்த முறை, அவர் நன்கு அறியப்பட்ட பிக்ஸலேடட் திமிங்கல மீம் படம் மற்றும் பிரபலமான டிஜிட்டல் கலை பாணியில் இருந்து உத்வேகம் பெற்றார், ஆனால் 3,350 ஈமோஜி வகை திமிங்கலங்களின் தொகுப்பை உருவாக்க தனது சொந்த ப்ரோகிராமைப் பயன்படுத்தினார்.
பென்யமின் ஏற்கனவே தனது மூன்றாவது, சூப்பர் ஹீரோக்களை மையமாக கொண்ட சேகரிப்பில் வேலை செய்து வருகிறார். அவர் திமிங்கலங்களைக் கொண்டு நீருக்கடியில் விளையாடும் ஒரு விளையாட்டை உருவாக்க விரும்புகிறார்.
தனது மகன் பதிப்புரிமை சட்டத்தை மீறவில்லை என்றும், தனது வேலைகளை “தணிக்கை” செய்ய வழக்குரைஞர்களை பணியில் அமர்த்தியுள்ளார் என்றும் கூறுகிறார் இம்ரான். அதோடு தனது சொந்த வடிவமைப்புகளுக்கு எப்படி வர்த்தக முத்திரை (Tadework) பெறுவது என்பதற்கான ஆலோசனைகளையும் பெற்று வருகிறார்.
பவுண்ட் ஸ்டெர்லிங் என்.எஃப்.டிகளின் தற்போதைய போக்கு குறித்து கலை உலகம் பிரிந்து கிடக்கிறது. கலைஞர்கள் அது ஒரு கூடுதல் வருவாய் மூலம் என்று கூறுகிறார்கள். என்.எஃப்.டிக்கள் மிக அதிகமாக விற்பனையாகும் பல கதைகளும் இருக்கின்றன.
ஆனால் அவைகள் எல்லாம் எதார்த்தத்தில் நீண்ட கால முதலீடா என்பதில் சந்தேகம் உள்ளது. கிறிஸ்டி ஏல நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ஏலதாரர் சார்லஸ் ஆல்சாப், என்.எஃப்.டிக்களை வாங்குவது அர்த்தமற்றது என பிபிசியிடம் கூறினார். “இல்லாத ஒன்றை வாங்கும் யோசனை விசித்திரமானது” என்று அவர் இவ்வாண்டின் தொடக்கத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.