தஞ்சை…
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ளது சோழபுரம். இங்குள்ள சின்ன அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சோனாலி. 23 வயதான சோனாலி கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சக்திதாஸ்என்பவருக்கும் சோனாலிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று காதலை வளர்த்து வந்தவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சக்திதாஸ் சோழபுரம் பகுதியில் குடிதண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு அந்த பிரச்சினை பெரிதாக வெடித்ததால் சக்திதாஸ் மனைவியை திட்டியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சோனாலி தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அங்கு மனமுடைந்து காணப்பட்ட சோனாலியை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றியுள்ளனர். இந்நிலையில், சம்பவம் அன்று வீட்டில் தனியாக இருந்த சோனாலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதை கண்ட உறவினர்கள் கதறி துடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சோனாலியின் அறையை ஆய்வு செய்து பிரேதத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் பெண் குழந்தையை விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.