திருநெல்வேலி மாவட்டத்தில் தாய் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் மகனும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமலா மிஷியர் (வயது 69) என்பவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தனது தாயின் மீது அதிக பாசம் வைத்திருக்கும் குட்வின், தாயை பார்ப்பதற்காக 2 வாரங்களுக்கு முன்னர் விடுமுறையில் வந்துள்ளார்.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கமலாவை மருத்துவமனைக்கு குட்வின் அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் எடுத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானபோது, தாயார் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.
தாயார் உடலை பார்த்து அழுதபடியே குட்வின் இருந்தார். கமலாவின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. திடீரென குட்வின் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தாய் இறந்த துக்கம் தாங்காமல் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. அன்னையர் தினமான நேற்று தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.