வெள்ளத்தில் சிக்கி இறந்த கல்லூரி மாணவி : 13 மணி நேரம் போராட்டத்தின் பின் உடல் மீட்பு!!

1098

நாமக்கல்……

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதகாலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில், பல இடங்களில் ஓடைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எருமப்பட்டி அருகே சிங்களகோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், இவருடைய மனைவி கவிதா.

இவர்களுடைய இளைய மகள் ஜீவிதா (18), இவர் நாமக்கல்லில் உள்ள, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். திங்கட்கிழமை மாலை கல்லூரி முடித்து விட்டு பஸ்சில் வந்த, ஜீவிதா, சிங்களங் கோம்பையில் இருந்து தாய் கவிதாவுடன் வீட்டிற்கு டூ வீலரில் சென்றார். அப்போது கொக்குப் பாறை ஓடையை கடந்து சென்ற போது, ஓடையில் திடீரென்று தண்ணீர் அதிகளவில் வந்தது.

அதற்கு மேல், டூ வீலரில் செல்ல முடியாமல், அதை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடை வழியாக இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது ஓடையில் வந்த வெள்ளம் இரண்டு பேரையும் இழுத்துச்சென்றது.

அவர்கள் இருவரும் வெள்ள நீரில் தத்தளித்தபோது கூச்சலிட்டனர். அதைக்கேட்டு அங்கு வந்தவர்கள் கவிதாவை மீட்டு ஓடையை விட்டு வெளியேற்றினார்கள். ஆழமான பகுதியில் தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட மாணவி ஜீவிதாவை அவர்களால் மீட்க முடியவில்லை. இது குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும், எருமப்பட்டி போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு படையினர், ஓடையில் இழுத்துச்செல்லப்பட ஜீவிதாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன்தேஜஸ்வி நேரில் வந்து மீட்புப்பணியை பார்வையிட்டார். இந்தநிலையில் சுமார் 12 மணி நேரம் தேடியும் கல்லூரி மாணவி கிடைக்கவில்லை. இøதையொட்டி மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று காலை கொக்கு பாறை ஓடை பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் ஓடைப்பகுதியில் தொடர்ந்து மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், 1 மணி நேரம் தேடலுக்குப் பிறகு கல்லூரி மாணவி ஜீவிதா ஓடை தண்ணீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

ஜீவிதாவின் உடலைக்கைப்பற்றிய எருமப்பட்டி போலீசார், பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எருமப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.