₹ 6 லட்சத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை மாத்திரம் கொடுத்து கார் வாங்கிய மருத்துவர் : அதிர்ச்சியில் கார் நிறுவன ஊழியர்கள்!!

295

தர்மபுரி….

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் வெற்றிவேல். வர்மா மற்றும் ஆயுர்வேத மருத்துவரான இவர், மழலையர் பள்ளி, நடத்தி வரும் வெற்றிவேல் சிறு வியாபாரமும் செய்து வருகிறார். வியாபாரம் மூலமாக கிடைத்த 10 ரூபாய் நாணயங்களை வங்கிக்கு கொண்டு சென்றபோது அதனை வங்கி ஊழியர்கள் வாங்க மறுத்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து தன் பள்ளியில் சிறுமிகள் பத்து ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் கேட்டபோது 10 ரூபாய் நாணயம் கடையில் வாங்குவது இல்லை என்றும் செல்லாக்காசு என்றும் கூறியுள்ளனர்.

அரசு வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா செல்லாதா என்ற சந்தேகமடைந்த வெற்றிவேல் அதனை சோதிக்க கடந்த ஒரு மாதமாக பல வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டை கொடுத்து 10 ரூபாய் நாணயங்களை சேகரித்துள்ளார்.

ரூபாய் 6 லட்சம் அளவில் 60,000 பத்து ரூபாய் நாணயங்கள் சேகரித்து, சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள பிரபல கார் நிறுவனத்தை அணுகியுள்ளார். 6 லட்சம் மதிப்பில் பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்து கார் ஒன்று வாங்க வந்ததாக தெரிவிக்க அதற்கு நிறுவனமும் சரி என்று சொல்லியுள்ளனர்.

இதை அடுத்து அரூரில் இருந்து 10 ரூபாய் நாணயங்களை குட்டி யானை வாகனம் ஒன்றில் வைத்து மூட்டை கட்டி எடுத்து வந்த வெற்றிவேல், அதனை கார் நிறுவன ஊழியர்களிடம் கொடுத்து சரி பார்க்குமாறு கூறினார். 480 கிலோ எடையில் 60,000 நாணயங்கள் உள்ளதா என சரிபார்க்கப்பட்டது. ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான பத்து ரூபாய் நாணயங்கள் இருப்பதை கார் நிறுவன ஊழியர்கள் உறுதி செய்து கொண்டனர்.

இதனையடுத்து வெற்றிவேல் விருப்பப்பட்ட புதிய காரினை அவரது குடும்பத்தினருடன் வாங்கி சென்றார். வங்கிகளில் வாங்க மறுத்த 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து புதிய காரினை ஓட்டிச் சென்றுள்ளார். அரசு வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் வெற்றிவெல் கூறினார்.

மேலும் 10 ரூபாய் நாணயங்களை வங்கியில் கொடுத்தால் வாங்க மறுப்பதாகவும், ஆனால் பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை கேட்டால் ஆரத்தி எடுக்காத குறையாக பத்து ரூபாய் நாணயங்களை எடுத்து தருவதாகவும் குற்றம் சாட்டினார்.

வீட்டில் முடங்கிக் கிடக்கும் பத்து ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் கொண்டு வருவதற்காகவே இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்து கார் வாங்கியதாக கூறினார்.